தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 2025 - 26ம் கல்வியாண்டிற்கான புது பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மாணவ மாணவிகளுக்கு இந்த பொருட்களை வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் ஜூன் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் என்றார்.

அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி முடிவுகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக, குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளதாக தகவல் உள்ளதே என அவரிடம் கேட்டதற்கு   இதுபோன்ற புகார்கள் எழுந்ததை அடுத்து, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து அதற்கான அறிவுரை வழங்கி இருக்கிறோம் எனவும் இதுபோன்று பள்ளிகளில் நடைபெறுவதாக தகவல் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.