கோவை மெட்ரோ ரயில் திட்டம் முதல்கட்டமாக அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையில் ரூ.10000 கோடி+ மதிப்பில் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக மெட்ரோ ரயில் திட்ட ஆய்வுக் குழுவினர் இன்று கோவை வந்தனர்.

அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் கணபதி பேருந்து நிறுத்தம், CMS பள்ளி ஆகியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஏற்கனவே சத்தி சாலை வழியே அமைந்துள்ள டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து சூர்யா மருத்துவமனை திருப்பம் வரை இருக்கக்கூடிய சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்போது சத்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை கோவை மாநகராட்சி செய்ய உள்ளதாக தகவல் உள்ளது. 

மேலும் இப்படி ஒரே நேரத்தில் இரண்டு திட்டங்களுக்கும் தேவையான நிலங்களை கையகப்படுத்தி, இரண்டு திட்டங்களுக்கும் ஏற்ப நிலத்தில் உள்ள குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் டெலிபோன் வயர்கள், பாதாள சாக்கடை போன்றவற்றை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது மூலம் இரு திட்டங்களும் எந்தவித சிக்கலும் இல்லாமல் செயல்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

அண்மை தகவல் படி, முன்னர் திட்டமிட்டபடி சூர்யா மருத்துவமனை வரை சக்தி சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாக இருந்தது மாற்றப்பட்டு கூடுதலாக ப்ரோ ஜோன் மால் வரை விரிவாக்கம் செய்யப்படும் என தெரியவருகிறது.